Tamil Center Stamford

Tamil-center-Stamford-logo

Tamil Center Stamford Inc.

An Organization by and for the tamil people of stamford, Conecticut

Arumbu-Logo
Youth-Logo
Arumbu-Logo
Tamil-center-Stamford-logo
Youth-Logo

Tamil Center Stamford Inc.

An Organization by and for the tamil people of stamford, Conecticut

அன்னையர் தினம்

அன்னையர் தினம்

அன்னையர் தினம்

குகன் டிராவல்ஸ். பெயர் பலகை பிரமாண்டமாக இருந்தது. நிமிர்ந்து பார்த்தபடி உள்ளே நுழைந்தான் விஷ்ணு. சுமார் ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடல் வாகு. நீண்ட நாட்களுக்கு பிறகு அவன் மனதில் ஒரு அமைதி. ஓர் மகிழ்ச்சி. புத்துணர்ச்சி கொண்ட ஒரு புன்முறுவலுடன் நின்றான். 

“வணக்கம் சார். வெல்கம் டு குகன் டிராவல்ஸ். எங்க டிராவல் பண்ண போறீங்க?” மென்மையான குரலில் கேட்டாள் அந்தப் பெண்மணி. 

“ஹலோ! என் பெயர் விஷ்ணு. ஏற்கனவே அம்பிகா மேடம் கிட்ட பேசிட்டேன். கொடைக்கானல் ட்ரிப்-க்கு ஒரு பன்னிரண்டு பேர் போற அளவுக்கு ஒரு வேன் சொல்லியிருந்தேன்”.

“வாங்க விஷ்ணு சார்”. பின்னிலிருந்து ஒரு பெண்ணின் குரல் வெளிப்பட்டது. “மீரா, ஐ வில் ஹாண்டில் திஸ்” என்றார் ஸ்டைலாக.

“ஓகே, ஷுயர் மேம். நைஸ் டு மீட் யு சார்” என்று சொல்லி விலகினாள் மீரா. 

சற்றே நரைத்த தலை அம்பிகா மேடத்திற்கு. குட்டையான கூந்தல். “வாங்க விஷ்ணு. இப்படி உட்கார்ந்து பேசலாம்”. விஷ்ணு பின் தொடர்ந்தான். 

தன் நாற்காலியில் அமர்ந்த அம்பிகா மேடம், மேசையிலிருந்த ஒரு ஃபைலை எடுத்தார். “நீங்க கேட்ட வேன் இருக்கு சார். பட் சில கண்டிஷன்ஸ் இருக்கு. படிக்கிறேன். உங்களுக்கு எல்லாம் ஓகேன்னா புக் பண்ணிடலாம்.”

விஷ்ணு முகத்தில் தயக்கமும் குழப்பமும் சூழ்ந்தது. “ஓகேன்னு தான் நினைக்கிறேன். பட், எதுக்கும் ஒரு ஒன்னு ரெண்டு நாள்ல கன்பர்ம் பண்ணலாமா?” என்று கேட்டான் தயங்கியவாறு. 

“சாரி சார். நீங்க புக் பண்றது பிஸியான டைம் எங்களுக்கு. மதர்ஸ் டே, கோடை விடுமுறை இப்படி நிறைய காரணங்கள். உங்களுக்கு பிராப்ளம் இல்லைன்னா நீங்க இப்பவே ரிவ்யூ பண்ணி புக் பண்ணிடறது நல்லது. இரண்டு நாட்களுக்கு அப்புறம் என்ன அவெய்ளபிலிடின்னு தெரியாது சார்.”

விஷ்ணுவின் மனதில் உற்சாகத்திற்கும் குழப்பத்திற்கும் இடையே நடந்த சண்டையில் உற்சாகம் வென்று குழப்பத்தை எங்கோ பின்னுக்கு தள்ளியது. “படிங்க மேம். ஐயம் ரெடி” என்றான். 

அவன் ஆர்வத்தை புரிந்து கொண்ட அம்பிகா மேம் டிராவல்ஸ் விதிமுறைகளை படிக்கத் துடங்கினார். 

🔹

சுமார் ஐம்பது வயதாவது இருக்கும் அந்த வீட்டிற்கு. முதல் இரண்டு அடுக்குகளும் ஐம்பது வயதானதை காட்டின. மூன்றாம் மேல் அடுக்கோ கேக்கின் மேல் ஒட்டவைத்த பொம்மைபோல் அழகாகவும், புதுமையாகவும் இருந்தது. விஷ்ணுவின் திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன் கட்டப்பட்டிருந்தது. அப்பாவின் கடைசி ஆசையாக இருந்தது. 

விஷ்ணு காரை வீட்டின் முன் நிறுத்தினான். “இருங்க கேட்டை நான் திறக்கிறேன்” என்றாள் சாரு. 

“என்ன! எப்பவும் நீயே போய் திற எனக்கு டயர்டா இருக்கும்ப. இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” 

“சார் இன்னைக்கு நிறைய வேலை பாத்துட்டீங்க. பாவம் ரொம்ப அலைச்சல். ஆல்சோ, ஐயம் வெரி எக்ஸைட்டட். கொடைக்கானல்! ஜாலி!.” என்றாள் சாரு. இடையே அவன் தலைமுடியை பாசமாய் சிலுப்பி விட்டாள்.

சாரு அந்த இரும்பு கேட்டை முயன்று தள்ளித் திறந்தாள். விஷ்ணு அந்த கேட்டின் அருகே இருந்த சுவற்றில் சற்று சிதிலமான அந்த பெயரைக் கண்டான். சரஸ்வதி குடில். அம்மா. மதர்ஸ் டே. கொரோனா காலத்தில் எங்கும் செல்ல முடியாமல் தவித்த குடும்பத்தினரை அறவனைத்து இரண்டு வருடங்களாக வீட்டிலேயே கிடந்து வெந்த அம்மா.  

“விஷ்ணு!” சாருவின் குரல் கேட்டதும் இயல்பு நிலைக்கு திரும்பினான். “என்ன?” என்பது போல் முகத்தை சுருக்கிக் கேட்டாள். ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்தான். “வருக! வருக!” என்று கைகளால் சமிக்ஞை செய்தாள். 

“அப்பா, அம்மா வந்தாச்சு! யே!” என்று உற்சாகத்தில் கத்திக்கொண்டே வீட்டிலிருந்து ஓடிவந்தாள் லயா. சாருவை நோக்கி இரண்டு கைகளையும் விரித்தவாறு ஓடி வந்த லயாவை வாரி அணைத்துக் கொண்டாள் சாரு. “லயா பேபி…”

“வந்தாச்சாமா? என்ன ரொம்ப லேட்டு?” லயாவின் பின்னே மெதுவாக வந்தாள் சரஸ்வதி. 

“ஆங் அத்த. இவங்க வந்து பிக்கப் பண்ண கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.” சாரு பதிலளித்தாள் லயாவை இடுப்பில் செருகியவாறு. 

“லயா. பாட்டி கிட்ட வாங்க. அம்மா குளிச்சுகிளிச்சுட்டு வரட்டும்மா. சாரு அந்தப் பையையும் இப்படி குடுமா. குளிச்சிட்டு வாங்க. சூடா இட்லி அடுப்புல வச்சிருக்கேன்”

“சச்சு டார்லிங்”. விஷ்ணு காரை நிறுத்திவிட்டு பின்புறமாக வந்து கட்டி அணைத்தான் தன் அம்மாவை. “நீயும் குளிச்சிட்டு வாப்பா”, கன்னத்தோடு கன்னம் ஒட்ட வைத்து சொன்னாள் சரஸ்வதி. 

🔹

மேசையில் மொத்த குடும்பமும் அமர்ந்து சாப்பிடுவதை கண்டு சரஸ்வதி சற்றே கண் கலங்கினாள். அவருக்கு குடுத்து வக்கலியே இத பாக்க. மனதில் நினைத்துக் கொண்டாள். 

“எல்லாரும் கேளுங்க.” ஒரு துண்டு இட்லியை மிளகாய் சட்னியில் துவைத்து எடுத்து வாயில் போட்டவாறே துவங்கினான் விஷ்ணு. “ இதுதான் பிளான். மொத்தம் பன்னிரண்டு பேர்தான் வேன்ல அலவுட். “ என்றான். 

“விஷ்ணு மாமா. நான் இல்லாம ஒருத்தரும் எங்கேயும் போக முடியாது” என்றான் மணி. பெரியக்கா மகன்.

“நீ இல்லாமலா? பெரியக்கா பேமிலி மூனு பேர். ஸ்ருதி வரலல்லக்கா?” அக்காவை பார்த்து கேட்டான் விஷ்ணு. 

“அவ போட்டாகிராபி க்ளாஸ் முடியலடா இன்னும். சோ அவ வர்றது கஷ்டம்தான்.” என்றாள் அக்கா. 

“ஓகே! அவளுக்கும் சேர்த்து தான் இந்த வாண்டு மணிய கூட்டிட்டு போறோமே. அண்ணா உங்க பேமிலி நாலு பேர், ஓகேதான?” என்றான் விஷ்ணு. 

“ஹண்ட்றட் பர்சன்ட். ஃபிஃப்டீன் சீட்டர்தன கேட்டோம். லக்கேஜ் வைக்க இடம் இருக்குமாடா?” என்றான் அண்ணன் ரவி. 

“ஃபிஃப்டீன் சீட்டர் கிடைக்கலண்ணா. எல்லாம் புக்குடு.  ப்ளஸ் லக்கேஜ் வைக்க நல்ல ஸ்பேஸ் இருக்கு. அப்புறம் எங்க பேமிலி நாலு பேர். பதினோரு ஆச்சு. அம்மா ஒன்னு பன்னிரண்டு. சூப்பர். அப்புறம். சில ரூள்ஸ் இருக்கு. எல்லாரும் தனித்தனி சீட்லதான் உட்காரனுமாம். மௌண்டன் டிரைவ்ங்கிறதுனால கேர்ஃபுல்லா இருங்கன்னு சொல்லிருக்காங்க. டிரைவர்க்கு மீல்ஸ் கரக்ட்டா டைம்முக்கு குடுத்துறணுமாம்.”

“நம்ம சாப்பிடும்போது டிரைவருக்கும் குடுத்துட்டா போச்சு.” என்றாள் சரஸ்வதி. 

“அது ஓகேம்மா. ஆனா நம்ம சீனரீஸ் பார்த்துட்டு பொறுமையா சாப்பிட்டுக்கலாம்ன்னு அவர மறந்துட கூடாதுன்னு சொல்றாங்க.”

“சரி நீ சாப்பிடுப்பா” என்றாள். 

“ம்ம் வர்றேன்” என்று தொடர்ந்தான். “நாளைக்கு காலைல நாலு மணிக்கு வண்டி வந்துடும். அஞ்சு மணிக்கு நம்ம புறப்பட்டாதான் குணா கேவ்ஸ் போக முடியாம். நான் ஃபுல் ஐட்டினெர்ரி ரெடி பண்ணிட்டேன். யாரும் லேட் பண்ண கூடாது. சச்சு டார்லிங். உனக்கு தான் ஃபர்ஸ்ட் சொல்லணும். அடுப்பங்கரையிலயே இருக்கக் கூடாது. என்னோட ஃபேவரைட் ஃபிஷ்ஷ மட்டும் ஃப்ரை பண்ணி சூடா எடுத்துக்கோ.”

“அத்த. நீங்க எதுவும் செய்ய வேண்டாம். வெளில பாத்துக்கலாம் விஷ்ணு.” என்றாள் சாரு. 

“ஆமாம். சாரு சொல்றது கரெக்ட். வெளில சாப்பிட்டுக்கலாம்மா. நாளைலேர்ந்து உனக்கு ரெஸ்ட்டுமா” என்றான் ரவி. 

“சகுனியாட்டம் ஒரு மனைவி. துரியோதனனாட்டம் ஒரு அண்ணன். நல்லா வருவீங்க” என்றான் விஷ்ணு. 

“அதெல்லாம் அம்மா பாத்துக்கறேன். ஒனக்கு அஞ்சு மணிக்கு முன்னாடி ரெடியாகனும். அவ்ளோதானே?!” என்றாள் சரஸ்வதி. 

“அம்புட்டுதேன்.” என்று சொல்லி சிரித்தான் விஷ்ணு. எல்லோரும் சிரித்தார்கள் கூடவே.

🔹

சுப்ரபாதம் பாடல் அவனை எழுப்பியது. மெல்ல கண் விழித்த விஷ்ணு “அப்பா ஏஞ்ச்சிட்டாங்க யே” என்று கத்திய லாய அவனை உலுக்கியது. 

“ஏன்டா பேபி இப்படி காலங்காத்தாலயே கத்துற.”

“நீங்களும் நயா பாப்பாவும் தான் இன்னும் ரெடி ஆகல. சீக்கிரம் எழுந்துருங்கப்பா” என்றாள் லயா. 

“பாட்டி என்ன பண்றாங்க”

“ஃபிஷ் ஃப்ரை பண்றாங்க”

“பாட்டி கிட்ட போய் அப்பாவுக்கு ஒரு கப்…” சொல்லும்போதே அறையின் கதவு லேசாக தட்டப்பட்டது.

“தம்பி… விஷ்ணு… எழுந்துட்டியாப்பா? காப்பி இந்தப்பா. உள்ள வரட்டுமா?” அந்த காலத்து பெண்ணானாலும் நாகரீகமாக கேட்டாள் சரஸ்வதி. 

உனக்கு மட்டும் எப்படிம்மா இது சாத்தியம்? என் மனதை நான் பிறந்தபோதே முழுவதுமாக படித்து விட்டாயா? இல்லை நீதான் என் மனதையே எழுதினாயா? நினைத்துக்கொண்டான் விஷ்ணு. “தட்ஸ் மை சச்சு டார்லிங்” என்றான் லயாவை பார்த்து. 

“இப்படி குடுங்க அத்த.” என்று வெளியிலிருந்து கேட்டது சாருவின் குரல். 

“அய்யய்யோ. உங்கம்மாடா. ஒளிஞ்சிக்கோ.” போர்வைக்குள் விளையாட்டாய் ஒளிந்து கொண்டார்கள் இருவரும். 

லேசாக சிணுங்கல் சத்தம் கேட்டது. நயா. விஷ்ணு, சாருவின் ஒன்றரை வயது குழந்தை. 

“டைம் ஆயிடுச்சு விஷ்ணு. நயா பேபிய நீதான் குளிப்பாட்டனும். நாங்க மிச்ச எல்லா வேலையும் பாத்தாச்சு” என்றாள் சாரு. 

“அப்பாவும் நானும் இங்க இல்லம்மா” என்று போர்வைக்குள்ளிருந்து சத்தம் வந்தது. 

போர்வையை விலக்கி “எழுந்திரிங்க ரெண்டு பேரும். நோ டைம் டு ப்ளே. கமான் லயா, மணி அண்ணா, அத்தை எல்லாரும் ரெடியான்னு பாப்போம். அப்பா இங்கேயே தூங்கட்டும் நம்ம போலாம் கொடைக்கானலுக்கு” என்றாள் சாரு. 

“பை பை அப்பா” என்றாள் லயா. அந்த சமயம் வேன் ஹார்ன் ஒலி கேட்டது.

🔹

“அந்த சாப்பாட்டு பாக்கெல்லாம் முன்னாடி காலுக்கு அடியில இருக்குற மாதிரி அடுக்கிடுப்பா.” என்றாள் சரஸ்வதி. “உன் பேர் என்னப்பா?”

“சக்திங்க மேடம்”

“நல்லது சக்தி. குழந்தைங்க பெட்டியெல்லாம் வாசல்லயே இருக்கு. ஒரு கை குடுக்கிறாயா?” என்றாள். 

“நான் பார்த்துக்கறேன் மேடம் நீங்க போங்க” என்றான் சக்தி. 

“நீல கலர் பை என்னுது. அத மட்டும் நான் ஏறும்போது எடுத்துக்கறேன். அதுல எனக்கு மாத்திரை எல்லாம் இருக்கு.”

“ஆகட்டும் மேடம்” என்றான் சக்தி. 

“ஹலோ.” என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்தான் விஷ்ணு. 

“குட் மார்னிங் சார். என் பேர் சக்தி.”

“நைஸ். டீசல் அடிச்சிட்டீங்களா சக்தி?” என்றான் விஷ்ணு. 

“ஆச்சு சார். மைலேஜ் செக் பண்ணி ஒரு சைன் போட்டுருங்க சார்”

“ஓகே. அம்மா நான் பாத்துக்கறேன். நீ உள்ள போய் ரெடியாகு.” திரும்பி சரஸ்வதியிடம் சொன்னான் விஷ்ணு. 

“விஷ்ணு இப்படி ஒரு நிமிஷம் வாயேன்.” என்றாள் சரஸ்வதி. 

சற்று நகர்ந்தான் விஷ்ணு. அதை கேட்ட சக்தி அவர்களிடமிருந்து நகர்ந்து எட்டி நின்றான். விஷ்ணு அவன் பண்பினை கண்டு “வெரி குட்” என்று நினைத்துக் கொண்டான். 

“சொல்லுமா”.

“கோவப்படாம கேளு. அப்பா இல்லாம நான் இல்ல. அப்பாவோட பெரிய ஃபோட்டோ இருக்குல்ல அதையும் எடுத்..”

கையை நிமிர்த்தி நில் என்றான் விஷ்ணு. “ம்மா இப்பதான் எல்லாரும் அந்த சோகத்துலேர்ந்து கொஞ்சம் வெளிய வந்துருக்கோம். பெரியக்கா பாத்துச்சு ட்ரிப் ஃபுல்லா அழுதுட்டே வரும். ரொம்ப எமோஷனல்லா போகவேண்டாம்மா. ரிலாக்ஸ்டா…”

“சரிடா. போதும்.” என்றாள் சலித்துக்கொண்டே. தன் துக்கத்தை தன் மனதினிலேயே பூட்டிக்கொண்டாள் சரஸ்வதி. “சரி. நயா பாப்பாவை என் பொறுப்புல விட்டுரு. அவ, நானு, லயா மூனு பேரும் பக்கத்து பக்கத்துல ஒக்காரனும்.”

“டபுள் ஓகே.”

“விஷ்ணு. பாப்பாவுக்கு கார்சீட் செட் பண்றீங்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் சாரு. 

“யெஸ். கார்சீட்டும் ரெடி. கேர்டேக்கரும் ரெடி.” என்றான் அம்மாவை பார்த்து. 

“அவங்க கிடக்கறாங்க அத்த. நான் இந்தவாட்டி நயாவ பாத்துக்குறேன். நீங்க என்ஜாய் பண்ணுங்க.”

“எனக்கு குட்டீஸ்தாம்மா என்ஜாய். நான் பாத்துக்கறேன்”

“சீ ஐ டோள்ட்யூ. உனக்கு வேணும்னா நான் கேர்டேக்கரா இருக்கேனே?” என்று சாருவை கட்டி அணைத்தான் விஷ்ணு. 

“அய்யோ. விடு விஷ்ணு. உங்களாலதான் அத்த இவரு இப்படி இருக்காரு.”

அப்போது “க்ளிக்” என்று கேமரா சத்தம் கேட்க மூவரும் திரும்பினர்.

“என்ன விஷ்ணு மாமா உங்க ரொமான்ஸ் இங்கயே ஸ்டார்ட் ஆயிடுச்சு போல”. அவள் வந்த காரின் பின் கதவை பாதி திறந்து வைத்து ஒரு கையில் கேமராவுடன் நின்றிருந்தாள் அந்த இளம்பெண். 

“ஸ்ருதி!” என்று ஆச்சரியத்தில் திளைத்தனர் மூவரும். 

“என்னடா பாப்பா திடுதிப்புன்னு வந்திருக்க”. சரஸ்வதி ஸ்ருதியை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். 

கீழே குனிந்து பாட்டியின் காலை தொட்டு வணங்கினாள் ஸ்ருதி. 

“அய்யோ எழுந்துக்கடா தங்கம். பசிக்குதா? ஏதாச்சும் சாப்பிட்டியா?” என்றாள் சரஸ்வதி. 

“அக்கா… இங்க பாரு யாரு வந்துருக்கான்னு. நமக்கு ட்ரிப்புக்கு ஃபோட்டோகிராஃபர் ரெடி” என்றான் விஷ்ணு. 

“ஹய் ஸ்ருதிமா. என்னடா இது. திடீர்ன்னு. அம்மாகிட்ட நேத்து கூட முடியாதுன்னியே! வாட் ஏ சர்ப்ரைஸ்” என்றாள் பெரியக்கா.

“நேரம் கடத்தாம சீக்கிரம் கிளம்புடா தங்கம்” என்றாள் சரஸ்வதி. 

“ஸ்ருதி ஒன்னோட பேக் அப்படியே வேன்ல ஏத்திறட்டுமா?” என்றான் விஷ்ணு. 

“ஆங் ஓகே மாமா. கேமரா லென்ஸ் கேர்ஃபுல். அப்புறம் அந்த கேப்காரனுக்கும் பே பண்ணிடுங்க மாமா” என்றாள் உள்ளே சென்று விட்ட ஸ்ருதி. 

“நீ பாரு விஷ்ணு. நான் போய் பாப்பாவையும் ரெடி பண்ணிடறேன்” உள்ளே சென்றாள் சாரு. 

“இவ மட்டும் வர்றதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய கார். ஒரு ஆட்டோல…” சட்டென்று தன் சிந்தனை ஓட்டம் தடைபட நின்றான் விஷ்ணு. 

“சார் என்ன கட் பண்ணி விடுங்க சார்.” என்று அந்த கேப்காரன் கேட்க சுய நினைவு திரும்பியது விஷ்ணுவுக்கு. 

கேப் ரிவர்ஸ் சென்றபின் “இப்ப என்ன பண்றது” என்று யோசித்தான் விஷ்ணு. 

“சார் பேக்ஸ் எல்லாம் ஏத்திட்டேன்” சக்தியின் குரல் கேட்டது. 

“ஆங் சக்தி. ஒரு ஆள் எக்ஸ்ட்ரா ஆயிடுச்சு. நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம் பரவயில்லையா?”

“சாரி சார் மலை ரோடுங்கறதால கொஞ்சம் கஷ்டம். நீங்க வேன்னா அம்பிகா மேடம் கிட்ட கேட்டு பாருங்க.”

தன் செல்லை எடுத்து டயல் செய்தான் விஷ்ணு. ரிங் ஒலித்தது. “ஹலோ. குகன் டிராவல்ஸ். மீரா ஸ்பீக்கிங். மே ஐ ஹெல்ப் யு”

“ஹலோ. என் பேரு விஷ்ணு”

“எஸ். உங்க வேன் ஆல்ரெடி டிப்பார்டட் சார். டிரைவர் பேர் சக்தி. இன்னும் வரலையா சார்?”

“நோ நோ. அவர் கரெக்டா வந்துட்டார். கேன் ஐ டாக் டு மிஸ் அம்பிகா?”

“ஓகே சார். ஒன் மினிட்” என்றாள் மீரா. 

சிறு வினாடிகள் கழித்து “ஹலோ திஸ் இஸ் அம்பிகா.”

“ஹலோ நான் விஷ்ணு பேசுறேன். ஒரு டூ மினிட்ஸ்?” என்று கேட்டான்.

“சொல்லுங்க சார்”

“எக்ஸ்ட்ரா ஒன் பெர்சன் ஆட் பண்ணிக்க முடியுமா?”

“சாரி சார். ஸ்டேட் கவர்மெண்ட் ஆர்டர். கொரோனா டைம் வேறயா. அதனால கொஞ்சம் கஷ்டம் சார். எங்க ட்ராவல்ஸுக்குதான் சிரமம்.”

“ஓகே. நான் பாத்துக்கறேன்.”  செல்லை வைத்தான்.

“பசங்க எல்லாரும் ஏறியாச்சு விஷ்ணு. நீ என்னப்பா இன்னும் வெளிய நிக்கிற?” சரஸ்வதி குரல் கேட்டு நிமிர்ந்தான் விஷ்ணு. முகம் வேர்த்து இருந்தது.

“என்ன தம்பி ஆச்சு?” சட்டென்று கண் கலங்கினாள் சரஸ்வதி.

விஷயத்தைச் சொன்னான். “இவ்வளவுதானா. நான் உனக்கு என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். நீ மொதல்ல ஏறு வண்டில.”

விஷ்ணு உள்ளே ஏற, “அப்பா நீ என் பக்கத்துல ஒக்காந்துக்கோ.” என்றாள் லயா.

“நீங்கள்ளாம் போயிட்டு வாங்க. எனக்கு மலைல ஏறுரதுன்னா கொஞ்சம் பயம். நான் வரல, சரியா?” என்றாள் சரஸ்வதி. 

“அய்யோ”, “போரு பாட்டி”, “ஏம்மா?” என்றெல்லாம் குரல்கள் ஒலித்தன.

“நாலு நாள் தான சீக்கிரம் ஒடிடும். ஜாலியா போயிட்டு வாங்க. விஷ்ணு கொஞ்சம் பாத்துக்க பா. சக்தி தம்பி பாத்து பத்திரமா.” என்று சொல்லி கதவை சாத்தினாள். வெளியே இருந்தவாறு கையசைத்தாள் சரஸ்வதி.

“பை பாட்டி” என்றன பேர குழந்தைகள். வேன் மெல்ல நகர்ந்தது.

அன்னையர் தினம் கொண்டாட குடும்பம் கிளம்பியது, அன்னையை வீட்டில் விட்டுவிட்டு.

– கமல்

1 comment

  1. Such an amazing story! Sad but true indeed… Amma’s are the ones who always sacrifice… !! Great writing.

Comments are closed.